கோலாலம்பூர், ஜனவரி 6 – அமெரிக்காவிலிருந்து விடுமுறையை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நஜிப் துன் ரசாக், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன் காரணமாக தற்போது ‘இ.கோலி’ (E. coli) என்ற கிருமி தாக்குதலினால், உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, ஓய்வில் இருந்து வருகின்றார்.
இருப்பினும் இல்லத்தில் இருந்தவாறே, வெள்ளத்தின் நிலைமைகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்.
“வீட்டில் இருந்தவாறு வெள்ளி நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவேன்” என தனது டுவிட்டர் தளத்தில் நஜிப் தெரிவித்திருக்கின்றார்.
அதற்கு முன்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நஜிப்புக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், அவர் குறுகிய கால விடுமுறையில் இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்றும் கூடிய விரைவில் அவர் அரசாங்கப் பணிக்குத் திரும்புவார் என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இ.கோலி (E. coli or Escherichia coli) எனப்படும் கிருமியானது மனிதர்களின் குடல் பகுதியில் பரவலாகக் காணப்படுவதாகும். இதன் சில ரகங்கள் நச்சுணவு உட்கொண்டால் ஏற்படுவது போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடும். கெட்டுப் போன உணவு, தண்ணீர் ஆகியவற்றின் மூலம் இந்தக் கிருமிகள் பரவக் கூடும்.