ஜாகர்த்தா, ஜனவரி 9 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்திலிருந்து உடல்களும், பாகங்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் வால் பகுதி என நம்பப்படும் பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய மீப்புபடை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வால் பகுதி இன்று இந்தேனேசிய கடற்படையின் முக்குளிப்பு வீரர்களால் மீட்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு மீட்கப்பட்டால், விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டு அதன் மூலம் விமான விபத்து குறித்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படலாம்.
மேலும், ஜாவா கடலில் தேடும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
162 பயணிகளுடன் ஏர் ஆசியா விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இதுவரை 43 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலையும், நடுக்கடலில் கடல் அலைகளின் சீற்றமும் மூட்புப் படையினர் மற்றும் முக்குளிப்பு வீரர்களின் போராட்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

படங்கள்:EPA