கொழும்பு, ஜனவரி 8 – ஒன்றரைக் கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கும் இலங்கை அதிபருக்கான தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கின்றது.
இலங்கை அதிபர் தேர்தலில், ஒருவர் இருமுறை மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதியை மாற்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகிறார்.
குடும்ப ஆட்சி, ஊழல், ஈழத் தமிழர் விவகாரம், ஐ.நா. விசாரணை என ராஜபக்சேவிற்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், அவருக்கு இது மிக முக்கியமான தேர்தலாக இருக்கும். எனினும், கடந்த கால ஆட்சி மக்களிடையே அவரின் செல்வாக்கை கடுமையாக சரியச் செய்துள்ளது.
இந்த தருணத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபல சிறிசேனா, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்டோரின் ஆதரவினைப் பெற்று முழுபலத்துடன் போட்டியிடுகிறார்.
இவர்களை தவிர்த்து, மேலும் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்குகிறது.
ராஜபக்சே, சிறிசேனா ஆகியோர் சிங்கள மொழிபேசும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இந்த சமூகத்ம் பெரும்பான்மையான வாக்குகள் உள்ளன.
இவர்களுடைய வாக்குகள் ராஜபக்சேவுக்கும், சிறிசேனாவுக்கும் சரிசமமாக கிடைக்கும். மீதமுள்ள தமிழர்கள் (13%), முஸ்லிம்கள் (9.5) ஆகியோரது வாக்குகள் இந்தத் தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்று கருதப்படுகின்றது.