பாரிஸ், ஜனவரி 9 – பிரான்சின் பாரிஸ் நகரை குறி வைத்துள்ள தீவிரவாதிகள், அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சார்லி ஹெப்டே பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து, வியாழக்கிழமை மாலையும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், அங்கு மசூதி அருகே உள்ள உணவகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு பிரான்ஸின் நெர்பெர்ன் அருகே இருக்கும் மசூதி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்தபோது மசூதியில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போய் உள்ள பிரான்ஸ், தலைநகர் பாரீஸ் மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களில் அதிகபட்ச பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்லி ஹெப்டோ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்று 18 வயதான இளைஞர் சரணடைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இரு இஸ்லாமிய சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சார்லி ஹெப்டோ பத்திரிகை முகமது நபியைப் பற்றியும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை கிண்டல் செய்யும் வகையிலும் கேலிச் சித்திரங்களை வெளியிட்டு வந்தது. இதற்கு பழி வாங்கும் வகையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த புதன்கிழமை சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகை ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.