ஜாகர்த்தா, ஜனவரி 11 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதி கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் கடலின் ஆழத்திலிருந்து மேல்மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு மீட்கப்பட்டது.
இருப்பினும், எதிர்பார்த்தபடி விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைக்கவில்லை. எனவே, கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான பலூன்கள், பளு தூக்கி (crane) ஆகியவற்றின் உதவியோடு மத்திய போர்னியோவில் உள்ள பெங்காலான் பன் என்ற வட்டாரத்தில் உள்ள குமாய் என்ற இடத்திலிருந்து, ஏர் ஆசியாவில் வால் பகுதி மீட்கப்பட்டது. ஜாவா கடல் பகுதியில் 30அடி ஆழத்தில் இந்த வால் பகுதி அமிழ்ந்து கிடந்தது.
இந்தப் பகுதியில், காணாமல் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியானதாக நம்பப்படும் ஒலிக் குறிப்புகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, வால் பகுதியில் கறுப்புப் பெட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரை 48 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.