Home கலை உலகம் “சீக்கிரம் விருதைக் கொடுத்து விடுங்களேன்” – சீகா விழாவில் கமல் நகைச்சுவை

“சீக்கிரம் விருதைக் கொடுத்து விடுங்களேன்” – சீகா விழாவில் கமல் நகைச்சுவை

659
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 11 – நேற்றிரவு நடைபெற்ற ‘சீகா’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன், விருதைப் பெற்றுக் கொள்ள மேடைக்கு வந்தபோது சில நகைச்சுவை வெடிகளின் மூலம் அரங்கத்தையே கலகலப்பூட்டினார்.

IMG_6644
கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் அமைச்சர் டாக்டர் சுப்ரா. அருகில் டி.மோகன், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், இலட்சுமி ராய்

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்ட பின்னர் மேடைக்கு வந்தார் கமல். அவருக்கு விருது வழங்க வாருங்கள் என நடிகைகள் தமன்னாவும், காஜல் அகர்வாலும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் இலட்சுமி ராயும் மேடையேறினார்.

கமலஹாசன் என்ற மூத்த கலைஞருக்கு – பன்முக சாதனையாளருக்கு விருது வழங்க இந்த புதிய நடிகைகளா என்ற முணுமுணுப்பு எங்கும் எழுந்ததைக் காண முடிந்தது.

#TamilSchoolmychoice

மேடைக்கு வந்த அவர்களை அறிவிப்பாளர் பிரித்விராஜ் அழைத்து, இப்போது நீங்கள் கமலுடன் மேடையில் நடனம் ஆட வேண்டும் என்றார். அவர்களும் தயங்க, கமலும் பின்வாங்க, கமலின் பாட்டு ஒன்றுக்கு ஆடல் அமைக்க நடன இயக்குநர்கள் தினேஷூம், ராபர்ட்டும் அழைக்கப்பட்டனர். கமலின் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே பாடலுக்கு தினேஷ் அசைவுகள் செய்து காட்ட காஜலும் தமன்னாவும் அப்படியே செய்தனர்.

IMG_6649
இடமிருந்து அறிவிப்பாளர் பிரித்விராஜ், டி,மோகன், டாக்டர் சுப்ரா, கமலஹாசன், தமன்னா, காஜல், இலட்சுமி ராய்

அதன்பின்னர் நடன இயக்குநர் ராபர்ட் “ஆட்டுக் குட்டி முட்டையிட்டு” என்ற பதினாறு வயதினிலே படத்திலே ஒலித்த பாடலுக்கு சப்பாணி போன்று நடிகைகளுடன் அபிநயம் பிடித்தார்.

விருது வழங்குவதற்கு முன்னாள் இந்த நிகழ்ச்சிகள் நீடித்துக் கொண்டே போவதைக் கண்ட கமல் மைக்கைப் பிடித்து “என்ன விருது இன்னும் ரெடியாகலையா? அதனால்தான் இப்படியெல்லாம் செய்கிறீர்களா?” என நகைச்சுவையாகக் கேட்க அரங்கமே அதிர்ந்தது.

பிறகு நடிகை இலட்சுமி ராய்யும் மேடையேற, அவர்களோடு கமலையும் ஆடச் சொன்னார்கள். “பேசாமல் விருதைக் கொடுத்துவிடுங்களேன்” என கமல் கெஞ்சுவது போல் நகைச்சுவையாகக் கேட்க, அரங்கம் மீண்டும் சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

இறுதியாக, சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா மேடைக்கு அழைக்கப்பட்டு அவரது கரங்களால் கமலுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நடிகர் சூர்யா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சுகாசினி, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் கமல் ஏற்புரை நிகழ்த்தினார்.

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)