கோலாலம்பூர், ஜனவரி 16 – மொழி பெயர்ப்புக்கு பெரிதும் பயன்பட்டு வந்த ‘கூகுள் ட்ரான்ஸ்லேட்’ (Google Translate) செயலி, தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது.
இதுநாள் வரை பயனர்கள், மொழி பெயர்ப்புக்கு தேவைப்படும் வரிகளை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்து வந்தனர். தற்போது கூகுள் நிறுவனம், அதனை புதிய வடிவில் மேம்படுத்தி உள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட செயலி, நாம் பேசும் மொழியினை தானாகவே புரிந்து கொண்டு, நமக்கு தேவையான மொழிக்கு மொழி பெயர்க்கும். இதில் மற்றுமொரு புதுமையாக, திறன்பேசிகளின் கேமராவைப் பயன்படுத்தியும் மொழிபெயர்க்கலாம்.
பயனர்கள் தங்களுக்கு மொழிபெயர்க்கத் தேவைப்படும் வாக்கியங்களை திறன்பேசிகளின் கேமராவில் உள்ள ‘வேர்ட் லென்ஸ்’ (Word Lens) மூலமாக படம்பிடித்தால், அதனையும் இந்த செயலி மொழி பெயர்க்கும்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் கூறியதாவது:- “இந்த புதிய மேம்படுத்தப்பட்ட செயலி பயனர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். கேமராவைப் பயன்படுத்தி செய்யப்படும் மொழிபெயர்ப்பு வசதியை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம்”.
“கேமராவில் எழுத்துருக்களை காட்சிப்படுத்திய உடனே, 32 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி விரைவில் மேம்படுத்தப்படும். இதற்கு இணைய வசதி தேவைப்படாது” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய செயலியில், ‘வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன்’ (Voice Translation) வசதியும் உள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் மொழியின் உச்சரிப்புகளையும் கேட்க முடியும்.
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ரஷ்ஷியன், இத்தாலியன், போர்சுகீஸ் ஆகிய ஆறு மொழிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய இயலும்.
விரைவில் அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் அறிமுகமாக இருக்கும் இந்த செயலியில், கடினமான வார்த்தைகளை மொழிபெயர்ப்பது செய்வது சற்றே கடினம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.