புதுடெல்லி, ஜனவரி 20 – டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் காண்கிறார். இந்நிலையில், இத்தேர்தலில் பா.ஜனதாவின் முதல்வர் பதவி வேட்பாளரை முடிவு செய்வதற்காக, பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில், முதல்வர் வேட்பாளர் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனையின் இறுதியில், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை கட்சி தலைவர் அமித் ஷா நிருபர்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:- “முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அவர் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கிரண் பேடி, டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார்”.
“டெல்லி கிருஷ்ணா நகர், பா.ஜனதாவின் பாரம்பரிய தொகுதி. கிரண் பேடி பா.ஜனதாவில் சேர்ந்ததால், கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை” என அமித் ஷா கூறினார்.