குபாங் கெரியான் (கிளந்தான்), ஜனவரி 20 – பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரும், கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (படம்), குபாங் கெரியானில் உள்ள மலேசிய விஞ்ஞானப் பல்கலைக் கழக மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பிற்பகல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என அவரது புதல்வர் நிக் அப்டு, தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிக் அப்டு பாஸ் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமாவார்.
அண்மைய சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்ததாகவும் நிக் அப்டு தெரிவித்துள்ளார். நிக் அசிசின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாக மலேசிய விஞ்ஞானப் பல்கலைக் கழகத்தின் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
83 வயதான நிக் அசிஸ் மாரடைப்பினால் பாதிப்படைந்திருக்கிறார் என்றும் அவரது நுரையீரல்களும் இருதயமும், கணையப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நிக் அசிசுக்கு முழு ஓய்வு தேவைப்படுவதால் அவர் யாரையும் சந்திக்க இயலாத நிலையில் உள்ளார் என்றும் அவரது மகன் நிக் அப்டு குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 23 ஆண்டுகள் கிளந்தான் மந்திரி பெசாராக பணியாற்றிய நிக் அசிஸ், அரசியலைத் தாண்டி மற்ற கட்சியினராலும், மற்ற இனத்தவராலும் போற்றப்பட்டவராவார்.
அன்வார் இப்ராகிமின் முயற்சியில் பக்காத்தான் ராயாட் எனப்படும் கூட்டணி உருவாக்கப்பட்டபோது, அதற்கு உறுதுணையாக இருந்தவர் நிக் அசிஸ்.
பாஸ், கட்சி நீண்ட காலமாக கிளந்தான் மாநிலத்தைத் தக்க வைத்திருப்பதற்கு நிக் அசிசின் முகமும், அவரது அரசியல் அணுகுமுறையும் முக்கிய பங்காற்றி வந்துள்ளன.
கடந்த 23 ஆண்டுகளாக செம்பாக்கா சட்டமன்ற உறுப்பினராகவும் நிக் அசிஸ் சேவையாற்றி வந்துள்ளார். 2013இல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிளந்தான் மந்திரி பெசார் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
13வது பொதுத் தேர்தலில் அவர் 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்தார்.
மிகவும் எளிமையான தோற்றமும் அணுகுமுறையும் கொண்டவர். மந்திரி பெசாராக இருந்த காலத்தில் அவரை யாரும், எப்போதும் அவரது இல்லத்தில்கூட சந்திக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.