புத்ராஜெயா, ஜனவரி 23 – கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் நீடிக்கும் என டத்தோ குமார் அம்மான் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மஇகா பொதுச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா உத்தரவிட்டதை எதிர்த்து சங்கப்பதிவிலாகா அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் குமார் அம்மான்.
வியாழக்கிழமை இரவு உண்ணாவிரதம் மேற்கொண்ட இடத்திலேயே படுத்து உறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்திய சமுதாயத்துக்காகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது இறுதி மூச்சிருக்கும் வரை போராட்டம் நீடிக்கும்,” என்றார் குமார் அம்மான்.
அவருக்கு ஆதரவாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் கே.பி.சாமி, மஇகா தகவல் பிரிவு தலைவர் சிவசுப்ரமணியன் மற்றும் வழக்கறிஞர் டி.ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக நேற்று வியாழக்கிழமை காலை உள்துறை அமைச்சில் கடிதம் ஒன்றையும் குமார் அம்மான் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே மஇகாவின் சொத்துக்கள் பல கட்சிப் பெயரில் இல்லை என்றும், அவற்றை மீட்டெடுக்கவும் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். உண்ணாவிரதம் மேற்கொண்ட அவரை ஐசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையாளம் மனோகரன், பாடகர் ராஜராஜசோழன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.