கெய்ரோ, ஜனவரி 25 – ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விதித்திருந்த, 3 நாட்கள் கெடு முடிந்ததால், பிணைக் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து அதனை காணொளியாக்கி அவர்கள் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்திற்கெதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் போரிட்டு வரும் நிலையில், அவர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கு ஐஎஸ்ஐஎஸ், அவ்வபோது பிணைக் கைதிகளை கொன்று காணொளிகளை வெளியிட்டு வருகின்றது.
பிணை பிடிக்கப்பட்டுள்ள ஜப்பானியர்கள் – கெஞ்சி கோட்டூ (இடது), ஹாருணா யுக்கவா (வலது). இடது புறம் உள்ள கெஞ்சிதான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளவர்
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு சமீபத்தில் நிதி உதவி வழங்கியது. அதனைக் கண்டிக்கும் வகையில் கெஞ்சி கோட்டூ, ஹாருணா யுக்கவா என்ற இரு ஜப்பானியர்களை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
மூன்று நாட்களுக்குள் 200 மில்லியன் டாலர்களை ஜப்பான் பிணைப் பணமாக கொடுக்கவில்லை எனில், அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக அறிவித்தனர்.
அவர்கள் விதித்த கெடு முடிந்ததால், ஹாருணா யுக்கவாவை கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகி உள்ள காணொளியில், கெஞ்சி கோட்டூ கூறியிருப்பதாவது:- “அபே, ஐஎஸ்ஐஎஸ் விதித்த 72 மணி நேர கெடுவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லை. அதனால், நாம் ஹாருணா யுக்கவாவை இழந்துள்ளோம். எங்களைக் கடத்தியவர்கள் தற்போது தங்கள் தேவையை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது பணம் தேவையில்லை, மாறாக ஜோர்டான் சிறையில் இருக்கும் சஜிதா அல் ரிஷாவி என்ற கைதியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சஜிதா அல் ரிஷாவி என்பவர் ஈராக்கை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியாவார். 2005-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது, வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ய முயன்றார்.
அப்போது அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பணத்திற்கு பதிலாக தற்கொலைப் படையை சேர்ந்த பெண் தீவிரவாதி ஒருவரை விடுதலை செய்ய நிர்பந்தித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த கைதி விடுதலை செய்யப்படுவாரா அல்லது இரண்டாவது ஜப்பானியரும் கொலை செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.