புதுடில்லி, ஜனவரி 26 – நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணியளவில் தனது மனைவியுடன் புதுடில்லி வந்தடைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வுகளின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-
தனது பிரத்தியேக விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 – விமானத்திலிருந்து தனது மனைவியுடன் புதுடில்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த ஒபாமா.
பாரம்பரிய வழக்கத்திற்கு மாறாக, அமெரிக்க அதிபரை நேரடியாக வரவேற்க பிரதமர் நரேந்திர மோடியே விமான நிலையம் வந்து காத்திருந்தார். ஒபாமாவைக் கட்டிப் பிடித்து வரவேற்றார் மோடி..
ஒபாமாவை வரவேற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு கையசைத்து புகைப்படத்திற்கு காட்சி தரும் மோடி, ஒபாமா, அவரது மனைவி மிச்சல் ஒபாமா..
விமான நிலையத்தில் சில நிமிடங்களே நீடித்த வரவேற்பு சம்பிராதயங்கள் முடிந்தவுடன் புதுடில்லியில் ஒபாமா தங்கவிருக்கும் ஐடிசி மவுரியா தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின்னர், நண்பகல் 12.30 மணியளவில் அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஒபாமாவுக்கு மரியாதை அணிவகுப்புடன் அதிகாரபூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
அவரை இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
ராஷ்டிரபதி பவனில் ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பின் போது…
பலவிதங்களில் ஒபாமாவின் இந்த இந்திய வருகை சரித்திர பிரசித்தி பெற்றதாக அமைகின்றது. பதவிக் காலத்தின்போது இந்தியாவுக்கு இரண்டு முறை வருகை தரும் முதலாவது அதிபராக ஒபாமா திகழ்கின்றார். அத்துடன், இன்று நடைபெறும் இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபரும் ஒபாமாதான்.
ராஷ்டரபதி பவன் வந்தடைந்ததும் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒபாமாவை வரவேற்க, அனைவருக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி வணக்கம் கூறும் ஒபாமா…
மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்த ஒபாமா, காந்தி நினைவிடத்தில் மலர் தூவி, இந்தியாவின் தேசத் தந்தையும், உலகம் எங்கும் அகிம்சைப் போராட்டத்தின் பிதாமகராகவும் திகழ்ந்த மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் தேசப் பிதாவுக்கு மரியாதை அஞ்சலி செலுத்திய ஒபாமா அதன் பின், அங்கிருந்த வருகையாளர் புத்தகத்தில் “காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக” பதிவு செய்தார்.
“காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காந்தியின் கொள்கைகள் உலகிற்கு கிடைத்த ஒரு பெரிய பரிசாகும். அந்த கொள்கைகளின் அடிப்படையில் உலக அளவில் அன்புடனும், சமாதானத்துடனும் நாம் வாழ வேண்டும்,’ என்ற டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரின் கருத்து இன்று உண்மையாகி வருகிறது” என ஒபாமா எழுதினார்.
படங்கள்: EPA