கோலாலம்பூர், ஜனவரி 26 – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்கமாக, கடந்த 23 முதல் மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
இக்கண்காட்சியை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவரும், தெற்கிழக்காசிய நாடுகளுக்கான கட்டமைப்பிற்கான மலேசியத் தூதருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு துவங்கி வைத்தார்.
(கண்காட்சியின் முதல் நாள் துவக்க விழாவில் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுடன் மாணவர்கள்)
இந்த கண்காட்சியில் சிறப்பம்சமாக பாங்கான் பாசிர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ‘தமிழ்அறிவு’ எனும் குறுஞ்செயலி அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது அண்டிரோய்டு செல்பேசியில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர் மேகவர்ணனின் வழிகாட்டலுடன் 7 மாணவர்கள் கொண்ட குழு, தினமும் 8 மணி நேரங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி உருவாக்கத்திற்கு மலேசிய உத்தமம் ( INFITT) அமைப்பும், ஓம் தமிழ் இணையத் தொலைக்காட்சி (OMTAMIL.TV) நிறுவனமும் பக்கபலமாக பல்வேறு உதவிகளை செய்துள்ளன.
செயலியின் பயன்பாடுகள்
(கண்காட்சியில் ஆசிரியர் மேகவர்ணனுடன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்)
மலேசியக் கல்வி அமைச்சின் ஆரம்பப்பள்ளிக்களுக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒன்றாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான மாணவர்களின் பாடங்களுக்கு ஏற்ப செய்யுளும் மொழியணிகளும் இந்த செயலியில் புகுத்தப்பட்டுள்ளன.
விரைவில் இந்த செயலியில் ஆறாம் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டங்களும் இணைக்கப்படும் என்று ஆசிரியர் மேகவர்ணன் தெரிவித்தார்.
இது குறித்து ஆசிரியர் மேகவர்ணன் மேலும் கூறுகையில், “வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் கூட மாணவர்கள் தங்களின் அண்டிரோய்டு கருவி மூலம் இந்த செயலியைப் பயன்படுத்தி தங்களது பாடங்களைக் கற்கலாம். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த செயலியில் திருக்குறள் போன்ற செய்யுள்களுக்கு விளக்கவுரையும் மாதிரி வாக்கியங்களும், படங்களும் விரைவில் புகுத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அண்டிரோய்டு தவிர ஆப்பிள், விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் மேகவர்ணன் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் மாணவர்களின் கைகளில் திறன்பேசிகளும், தட்டைக்கணிகளும் எளிதில் கிடைக்கின்றன. அதனால் அத்தகைய புதிய தொழில்நுட்பத்தின் மீது அவர்களுக்கு அளவு கடந்த ஈர்ப்பும் ஏற்படுகின்றது.
நவீன தொழில்நுட்பத்தை விளையாடுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது பாடத்திட்டங்களை தாங்கள் மிகவும் விரும்பும் கருவிகளின் வழி படிப்பது, அவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும்.
இதனால் அவர்களின் கற்கும் ஆற்றலும், திறனும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
இச்செயலியை உருவாக்கிய பாங்கான் பாசிர் துன் சம்பந்தன் மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக வழிநடத்திய ஆசிரியர் மேகவர்ணனுக்கும், உத்தமம் மற்றும் ஓம்தமிழ் அமைப்புகளுக்கும் செல்லியலின் வாழ்த்துகள்.
இந்த குறுஞ்செயலி குறித்த முழு விபரங்களை அறிய https://play.google.com/store/apps/details?id=com.SJKTTSINNOVATIONCLUB என்ற அகப்பக்கத்தை பார்வையிடலாம்.