Home நாடு “மத்திய செயற்குழுவிடம் ஆலோசிக்காமல் பதவி நீக்க முடியாது” – சரவணன் பதிலடி

“மத்திய செயற்குழுவிடம் ஆலோசிக்காமல் பதவி நீக்க முடியாது” – சரவணன் பதிலடி

795
0
SHARE
Ad

image.adapt.960.high

கோலாலம்பூர், ஜனவரி 28 – கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன்  இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், பழனிவேல் கட்சித் தலைவர் என்ற போதிலும், தன்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் மத்திய செயலவையிடம் விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பழனிவேலின் நடவடிக்கைகள் முன்னுப்பின் முரணாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

காரணம், மஇகா-வில் ஒரு பிரச்சனை என்றால், அது தேசிய முன்னணியையும் தான் பாதிக்கும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு காண உடனடியாக மத்திய செயலைவையை கூட்ட வேண்டும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

இது குறித்து சரவணன் மேலும் கூறியிருப்பதாவது:-

“யாரென்று தெரியாத இளைஞர்கள், நாங்கள் பாதுகாப்பிற்கு வந்துள்ளோம். நீங்கள் உள்ளே செல்லக்கூட்டாது என்று மஇகாவின் தேசிய உதவித் தலைவரான என்னை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.”

“நேற்று மாலை 6.00 மணிக்கு என்னை மாநிலத் தலைவர் (கூட்டரசுப் பிரதேசம்) பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக டத்தோஸ்ரீ பழனிவேல் அறிவித்தார். சட்டப்பூர்வமாக அந்த உரிமை அவருக்கு கிடையாது. நியமிக்கப்பட்ட அதிகாரிகளை மத்திய செயலவையின் ஆலோசனை இல்லாமல் பழனிவேல் நீக்க முடியாது.”

“ பழனிவேல் என்னை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்ட கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் காலை 10.00 மணிக்கு, கட்சித் தலைமையகத்தில் நீங்கள் உள்ளே வரமுடியாது என்று 20 குண்டர்கள் அந்த கடிதத்தை என்னிடம் கொடுக்கின்றனர்”

“அதுமட்டுமில்லாமல் மாலை 6.00 மணிக்கு பத்திரிகை அலுவலகங்களுக்கு என்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக செய்தி அனுப்பினார் தேசியத் தலைவர். ஆனால் இரவு 11.00 மணிக்கு நீங்கள்  கட்டாயம் தேசிய உதவித் தலைவர் பதவியில் தொடரவேண்டும் என செல்பேசியில் செய்தி அனுப்பியுள்ளார்.”

“காலையில் ஒரு பேச்சு. மதியம் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசும் பழனிவேல், எந்த சிந்தனையில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இருந்த போதிலும், தேசியத் தலைவர் என்ற மரியாதையை நாங்கள் அவருக்கு கொடுக்கின்றோம்” என்று டத்தோ சரவணன் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், “இப்போது கட்சியில் நடக்கின்ற பாதுகாப்பு பிரச்சனைகளால், தொண்டர்கள் பலர் கட்சி அலுவலகத்திற்குள் வரமுடியவில்லை. குமார் அம்மானின் உத்தரவின் பேரில் குண்டர்களும் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.”

“தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரிவுத் தலைவியை கூட உள்ளே வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது மத்திய செயலவை உடனடியாக கூடவேண்டும். ஏன்னென்றால் மஇகாவில் உண்மையிலேயே இந்த கடிதத்தை பழனிவேலு தான் வழங்குகின்றாரா? அல்லது அவருக்கு தெரியாமல் யாராவது கொடுக்கின்றனரா?என்று தெரியவில்லை”

“இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுகின்ற பழனிவேல், முடிவு அவர் எடுக்கின்றாரா? அல்லது ரமணன் சொன்னது போல அவர் வீட்டில் வேறு யாராவது முடிவு எடுக்கின்றனரா? என்று எங்களுக்கு தெரியவில்லை.”

“இந்த பிரச்சனையெல்லாம் தீர்வுகாண வேண்டும் என்றால் மஇகா செயலவை உடனடியாக கூடவேண்டும்”

“பதவியில் நியமிப்பதற்கு மட்டுமே தலைவருக்கு அதிகாரம் உள்ளது.அடுத்த நியமனம் வரும் வரை நான் பதவி வகிக்க முடியும். சட்டப்படி நான் ராஜினாமா செய்தாலோ அல்லது நான் இறந்து போனாலோ அல்லது நான் திவால் ஆனவன் என்று அறிவிக்கப்பட்டாலோ தான் அடுத்த நியமனம் செய்ய முடியும்” என்று இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ சரவணன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, டத்தோ சரவணனுடன் மஇகா முன்னாள் வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ வேள்பாரி, மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி, இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா ஆகியோரும் உடன் இருந்தனர்.

 செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்