கொழும்பு, ஜனவரி 31 – இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள சிறிசேனா தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், சரண் அடைந்த போராளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரை இலங்கை இராணுவம் சித்தரவதை செய்ததாகவும் உலக அளவில் இலங்கையின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை விசாரிக்க ஐ.நா. 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது. எனினும் இக்குழுவிற்கு அனுமதி அளிக்க ராஜபக்சே தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. இலங்கையின் இந்த செயல்பாடு உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஐ.நா. விசாரணை தொடர்பான கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில், “ஐ.நா.விசாரணைக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பளிக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுடா ஜரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ஐ.நா விசாரணையை இலங்கையில் மேற்கொள்ள புதிய அரசு ஒத்துழைக்கும் என பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.