Home இந்தியா காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் நடிகை குஷ்பு பிரச்சாரம்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் நடிகை குஷ்பு பிரச்சாரம்!

938
0
SHARE
Ad

kushboo,புதுடெல்லி, பிப்ரவரி 4 – டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பாபர்பூர், சீலம்பூர், விஸ்வாஸ் நகர், காந்தி நகர், இந்தர்புரி, ஆசிரமம் சன்லைட் காலனி, ஜல் விஹார், நிஜாமுதீன் பஸ்தி, பல்லிமரான், திலக் நகர், தமிழர் என்கிளேவ், கியாலா மங்கோல்புரி போன்ற இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

குஷ்பு செல்லும் இடங்களில் அவரது பேச்சை கேட்பதற்காக தமிழர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் திரளாக கூடுகிறார்கள். இது குறித்து டெல்லியில் குஷ்பு ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

#TamilSchoolmychoice

“என்னுடைய பிரச்சாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது காங்கிரஸ் செயல்படுத்திய நல்ல திட்டங்கள் பற்றி கூறி வருகிறேன். இதுதவிர பா.ஜ.க. ஆட்சி பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் நாட்களை கடத்தி வருவது பற்றியும் எடுத்து கூறுகிறேன்”.

“கடந்த சில மாதங்களாக பாரதீய ஜனதா ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கியே நகர்ந்து வருகிறது. வெறும் பிரச்சார நோக்கம் மட்டுமே அவர்களின் செயல்பாடுகளில் முக்கியமாக உள்ளது”.

“ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு ஒரு போட்டியே அல்ல. அவர்களை நாங்கள் பொருட்படுத்தவும் இல்லை. எங்களுடைய முக்கிய போட்டியே பாரதீய ஜனதாவுடன்தான். டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்கள்”.

kushboo-“ஆனால் அவர் எல்லாவற்றையும் நடுவிலேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். எனவே இப்போது அவரை யாரும் நம்பத் தயாராக இல்லை. நான் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த பகுதியின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவற்றை மக்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்கிறேன்”.

“இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலை பொறுத்த வரை பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை மிகவும் பலமாக வீசுகிறது. அது பெருமளவில் எங்களுக்கு சாதகமாக அமையலாம்”.

“தமிழர்கள் வசிக்கும் இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு. மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாக அவர்கள் கூறினார்கள். நான் சென்ற இடங்களில் எல்லாம் கருப்பு பணம் பற்றி யாரும் பேசவில்லை. ஏன் தண்ணீர் தரவில்லை? ஏன் மின்சார வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றுதான் கேள்வி எழுப்பினார்கள்”.

“டெல்லியின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்களை அவர்களுடைய இடங்களுக்கே சென்று சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது” என குஷ்பு அளித்த பேட்டியில் கூறினார்.