பெங்களூர், பிப்ரவரி 6 – சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘ஹூவாவெய்’ (Huawei), பெங்களூரில் சுமார் 170 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (Research and Development Center) ஒன்றை தொடங்கி உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தின் கீழ் தன்னை இணைத்துக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள், கருவிகள் மற்றும் செயலிகளின் உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த மேற்கத்திய நிறுவனங்கள், இந்திய வர்த்தக சந்தைகளில் ஆட்டம் கண்டு வரும் நிலையில், சீன நிறுவனங்கள் இங்கு தொடர்ந்து கோலோச்சி வருவது முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் வியப்பை அளிப்பதாக உள்ளது.
ஆனால், சீன நிறுவனங்கள் இந்திய நடுத்தர மக்களின் விருப்பம் மற்றும் மனநிலையை அறிந்து, அதற்கு தகுந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் வர்த்தகம் செய்வதே அந்நிறுவனங்களின் வெற்றிக்கான இரகசியமாகும்.
சமீப காலமாக இந்தியாவில் பிரபலமடைந்து வரும் சியாவுமி, ‘ஹூவாவெய்’ போன்ற நிறுவனங்களின் வெற்றிக்கு இதுவே காரணம் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் சியாவுமி பல மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ‘ஹூவாவெய்’ நிறுவனம் தனது முந்தைய அறிவிப்பினை தற்போது செயல்படுத்தி உள்ளது.
இந்த புதிய மையம் தொடர்பாக ‘ஹூவாவெய்’ நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி வில்சன் வாங் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த மையம் ஆதாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இங்கு சுமார் 5000 மென்பொருள் பொறியாளர்கள் மென்பொருள் மேம்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பணிகளை செய்ய இருக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியின் புதிய திட்டத்தின் கீழ் இந்த மையம் அமைந்துள்ளதால், இங்கு பணியில் அமர்த்தப்படும் 98 சதவீத ஊழியர்கள் இந்தியர்களாக இருப்பர் என்று கூறப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.