கோலாலம்பூர், பிப்ரவரி 9 – எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ல் நாளை பிப்ரவரி 10-ம் தேதி, இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அவருக்கு முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபரும், நடப்பு மணிலா மேயருமான ஜோசப் எசெர்சிடோ எஸ்ட்ராடா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, 13-வது பிலிப்பைன்ஸ் அதிபராகப் பதவி வகித்த எஸ்ட்ராடா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் வாழ்க்கையில் மற்றொரு சவாலான நேரம் இது. இந்த நேரத்தில் எனது இதயப்பூர்வமான ஆதரவை அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் எனது நண்பர் என்பதற்காக மட்டும் இதை கூறவில்லை. அன்வார் மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மிகவும் நாகரீகமான மனிதர்.இந்த வழக்கில் அன்வார் விடுதலை ஆவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.”
“அரசியல் விளையாட்டில் அன்வார் சிக்க வைக்கப்பட்டுள்ளார். நாட்டின் ஜனநாயகத்திற்காக கடுமையாக போராடி வருபவர். மலேசிய மக்கள் அனைவரும் அன்வாரின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்வதோடு, மலேசியர்களின் தலைவராக மீண்டும் அன்வார் வருவார் என்ற நம்பிக்கையுள்ளது” இவ்வாறு எஸ்ட்ராடா தெரிவித்துள்ளார்.
எஸ்ட்ராடா கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி, கொள்ளை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 43 நாட்களுக்குப் பிறகு, அதிபர் க்ளோரியா அரோயோவால் முழு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். எஸ்ட்ராடோ ஒரு நடிகராகவும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். தற்போது கடந்த 2013-ம் ஆண்டு முதல் மணிலா மேயராகப் பதவி வகித்து வருகின்றார்.