புதுடெல்லி, பிப்ரவரி 10 – ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக புதிய பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இதில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதற்கு அம்பானி சகோதரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அனைத்துலக ஊடகவியலாளர்களை கொண்ட அமைப்பு சேகரித்த இந்தப் பட்டியல் இந்தியப் புள்ளிகளால் நிறைந்து இருந்தது.
இந்த பட்டியலின்படி, ரிலையன்ஸ் நிறுவனக் குழும உரிமையாளர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் உள்ளிட்ட சிலரது பெயரில் ‘எச்.எஸ்.பி.சி.’ வங்கியில் 1,195 கணக்குகளில் 25,420 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பலரும் தங்களது பெயரில் எந்த வெளிநாட்டு வங்கியிலும் ரகசிய கணக்குகள் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல், “எங்களிடம் கருப்புப் பணம் ஏதுவும் இல்லை”.
“எங்களிடம் மறைப்பதற்கோ, கவலைப்படவோ ஏதுமில்லை. சட்டத் திட்டங்களை நாங்கள் ஒழுங்காகக் கடைபிடித்து வருகிறோம்” என தெரிவித்தார்.
இதேபோல், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர், “உலகில் உள்ள எந்த நாடுகளிலும் முகேஷ் அம்பானியின் பெயரில் சட்டவிரோதமான வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அனில் அம்பானியின் சார்பில் விளக்கம் அளித்த அவரது செய்தி தொடர்பாளரும், “அனில் அம்பானிக்கு எச்.எஸ்.பி.சி. வங்கியின் எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.