கோலாலம்பூர், பிப்ரவரி 16 – 2013-ம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற போது, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிற்கும் துணைப் பிரதமர் பதவி வழங்குகிறேன் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அழைப்பு விடுத்ததாக நூருல் இசா அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
“பாஸ், ஜசெக அனைத்தையும் விட்டுவிட்டு வாருங்கள். துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். அரசாங்கத்தை அமைப்போம். மகிழ்ச்சியாக இருப்போம். இப்படி தான் நஜிப் எனது தந்தை அன்வாரிடம் கூறியுள்ளார்” என்று நேற்று முன்தினம் இரவு செப்ராங் ஜெயாவில் நடைபெற்ற ‘மக்களின் சுதந்திரம்’ என்ற மாநாட்டில் நூருல் இசா அங்கு கூடியிருந்த பக்காத்தான் ஆதரவாளர்கள் முன் தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்த நேரத்தில் அன்வாரின் முடிவு என்ன? அவர் துணைப் பிரதமர் பதவியை நிராகரித்தார். காரணம் வாழ்வோ சாவோ, நமது கொள்கைகளின் படி கூட்டணியில் இணைந்து வேலை செய்ய வேண்டும். நம்மை யாரும் விலை கொடுத்து வாங்கவோ அல்லது விலை போகவோ கூடாது” என்று நூருல் விளக்கமளித்தார்.