கோலாலம்பூர், பிப்ரவரி 17 – மஇகா-வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொடர்பில் அக்கட்சியின் தேசிய உதவித் தலைவரும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அந்த சந்திப்பின் போது, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்ற இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தில், 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மத்திய செயலவை உறுப்பினர்களில் 23 பேர் கலந்து கொண்டதாகவும், 9 மட்டுமே கலந்து கொள்ளவில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.
மேலும், அந்த 23 மத்திய செயலவை உறுப்பினர்களும் கடந்த பிப்ரவரி 6-ம் தேதியிட்ட சங்கங்களின் பதிவிலாகா அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உத்தரவுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.
மத்திய செயலவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயல்குழுவில் இருந்து மஇகா மறுதேர்தலை நடத்த தேர்தல் குழு அமைக்கப்படும் என்றும், இந்த தேர்தல் குழு மஇகா மறுதேர்தலை நடத்தும் அதிகாரம் கொண்டிருக்கும் என்றும் சரவணன் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்த தேர்தல் குழு நடத்தும் மறுதேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே மஇகா கட்சியில் அதிகாரப்பூர்வ பொறுப்பு வகிக்க முடியும் என்றும் சரவணன் கூறினார்.
மேலும், பிப்ரவரி 6-ம் தேதியிட்ட கடிதத்தில் சங்கங்களின் பதிவிலாகா குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை செயல்படுத்த குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், கூடுதல் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.
பழனிவேலுக்கு அதிகாரம் கிடையாது
தற்போதைய நிலையில், கட்சியில் யாரையும் நீக்கவோ, நியமிக்கவோ மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லையென சங்கங்களின் பதிவிலாகா முடிவெடுத்துள்ளதாகவும் சரவணன் கூறினார்.
இனி பழனிவேல் கட்சியின் எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி சங்கங்களின் பதிவிலாகா அனுப்பியுள்ள கடிதம் செல்லாது என நிரூபித்து உத்தரவு வாங்க வேண்டும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.
“இது மஇகா பிரச்சனை மட்டும் கிடையாது. இது ஒரு தேசிய பிரச்சனை” என்றும் சரவணன் கூறியுள்ளார்.
காரணம், “இதுவரையில் அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் ஒருவர், அரசாங்க இலாகாவான சங்கப்பதிவிலாகாவின் மீதே வழக்குத் தொடுக்கும் அளவிற்கு சென்றதில்லை. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பழனிவேல் அரசாங்க இலாகாவின் மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் என்றும் சரவணன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காவண்ணம் அரசு தக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் சரவணன் கேட்டுக்கொண்டார்.