பலுசிஸ்தான், பிப்ரவரி 21 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று தீவிரவாதிகள் இரயில் தண்டவாளத்தில் 20 கிலோ வெடி மருந்துகளை வெடிக்கச் செய்ததால், நவாப் அக்பர் புக்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விழுந்தன.
எனினும், இதில் அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. லாகூரில் இருந்து குவெட்டா நகரை நோக்கி சென்ற அக்பர் புக்தி எக்ஸ்பிரஸ் இரயில், டேரா அல்லாஹ்யார் இரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டது.
இரயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றபொழுது தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் சுமார் 15 அடி நீளத்துக்கு தண்டவாளம் அடியோடு பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது.
எதிர்பாராத இந்த சம்பவத்தினால் அந்த இரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்து விழுந்தன. எக்ஸ்பிரஸ் இரயில் பயணிகளை இறக்கிவிட்டு, அப்போதுதான் புறப்பட்டதால் வேகம் குறைவாகவே சென்றுள்ளது.
இதனால் 3 பெட்டிகள் மட்டுமே கவிழ்ந்தன. இந்த சம்பவம் பற்றி பலுசிஸ்தான் மாகாண காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“இரயில் தண்டவாளத்தை தகர்க்க சுமார் 15-20 கிலோ எடை கொண்ட நவீன வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான உயிர்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இது வரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.