அகமதாபாத், பிப்ரவரி 25 – பன்றிக்காய்ச்சல் நோய் எதிரொலியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்,டெல்லி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 875 பேர் உயிரிழந்துள்ளனர்.
14,673 பேருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நோய்க்கு குஜராத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக உள்ளது. குஜராத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 3527 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 190 பேருக்கு இந்நோய் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநிலம் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.