பெங்களூரு, பிப்ரவரி 26 – ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் ஜெயலலிதா உள்பட 4 பேர்கள் மற்றும் நிறுவனங்களின் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து அரசு தரப்பு வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று தனது வாதத்தை தொடர்ந்தார்.
அவர் வாதிடுகையில், ‘‘ஜெயலலிதா அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் பதவி வகித்தார். சசிகலாவின் கணவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்”.
“சுதாகரன் சென்னைக்கு படிக்க வந்தபோது ஜெயலலிதா வீட்டில் தங்கினார். இளவரசியின் கணவரும் உணவு துறையில் பணியாற்றினார். அவர் மரணம் அடைந்துவிட்டார். ஜெயலலிதா வீட்டில் 4 பேரும் தங்கி இருந்தனர். ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேருக்கு வருமானம் எதுவும் இல்லை”.
“ஜெயலலிதாவிடம் இருந்து தான் மற்ற 3 பேருக்கும் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றது” என்றார். அப்போது நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, ‘
‘ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதாக நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா? 3 பேரும் ஜெயலலிதாவின் பினாமிகள் என்று சொல்கிறீர்கள்”.
“ரத்த உறவு இருப்பவர்கள் மட்டுமே பினாமிகளாக இருக்க முடியும். அவ்வாறு இருக்க இவர்களை எப்படி ஜெயலலிதாவின் பினாமிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’’ என்று கேள்விகளை கேட்டார்.
நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு வழக்கறிஞர் பதில் சொல்லாமல் மவுனமாக நின்று இருந்தார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி,
‘‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இப்படி அமைதியாக நின்று இருந்தால் எப்படி? நீங்கள் நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்வது இல்லை. கீழ் நீமன்றத்தில் எப்படி வாதிட்டீர்கள்?.
இந்த வழக்கு விவரங்கள் முழுவதையும் படித்தீர்களா?. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள், ஆவணங்கள் எங்கே?’’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
நேற்று விசாரணை முடியும் தருவாயில் ‘‘சில நாட்கள் கால அவகாசம் தர வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இப்போது கால அவகாசம் எதுவும் தர முடியாது என்று கூறிய நீதிபதி நாளை (அதாவது இன்று) வந்து வாதிடுங்கள் பார்க்கலாம்’’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
அரசு வழக்கறிஞர் பவானிசிங் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவின் வாக்குமூலத்தை வாசித்து முடித்தார். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) விசாரணை அதிகாரிகள் லத்திகா சரண், பெருமாள் உள்ளிட்டோரின் வாக்குமூலத்தை படிக்கிறார்.
முன்னதாக உணவு இடைவேளையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி குணசீலன், நாங்கள் அனைத்து விவரங்களையும் வழங்கி இருக்கிறோம்.
நீங்கள் அதை எடுத்து வாதிட வேண்டியது தானே என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.