புதுடெல்லி, பிப்ரவரி 27 – கடந்த டிசம்பர் மாதம் நடந்த காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அதிக வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு காலதாமதம் ஆனதால் அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பி.டி.பி. (மக்கள் ஜன நாயக கட்சி)-யும், பா.ஜனதாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தின.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370–வது அரசியல் சட்டப்பிரிவு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தல், மேற்கு பாகிஸ்தான் அகதிகளை குடியேற்றுதல், பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்துதல் ஆகியவற்றில் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.
பல சுற்று பேச்சுகளுக்குப் பின் இதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. இறுதியாக டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா சந்தித்துப் பேசினார். இதில் காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து பி.டி.பி. தலைவர் முப்தி முகமது சயீத் காஷ்மீர் முதல்–மந்திரியாக 1–ந்தேதி பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜனதாவுக்கு துணை முதல்வர் மற்றும் யார்–யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த 23–ஆம் தேதியே பிரதமர் மோடியை முப்தி முகமது சயீத் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அதிபத் பிரணாப் முகர்ஜி உரை, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பான கூட்டம், ரெயில்வே பட்ஜெட் போன்றவற்றால் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை பி.டி.பி. தலைவர் முப்தி முகமது சயீத் சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் சட்டசபை பற்றி முடிவு செய்யப்பட்டது.
மேலும் சட்டசபை பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று முப்தி முகமது சயீத் அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக் கொண்டார். மோடியை சந்தித்த பின்பு முப்தி முகமது சயீத் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:– “காஷ்மீரில் பி.டி.பி.–பா.ஜனதா கூட்டணி சட்டசபை வருகிற 1–ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கிறது. நான் முதல்வராக பதவி ஏற்கிறேன். விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்”.
“அதை அவர் ஏற்றுக் கொண்டார். சட்டசபை பதவி ஏற்றதும் அன்று பிற்பகல் 3 மணிக்கு இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும்” என அவர் கூறினார். மற்ற நிபந்தனை விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
ஜம்முவில் வருகிற 1–ஆம் தேதி நண்பகலில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. கவர்னர் என்.என்.வோரா புதிய முதல்வர் மற்றும் ரமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முப்தி முகமது சயீத் தவிர பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த 13 பேரும், பா.ஜனதா சார்பில் 12 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள். பா.ஜனதாவுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படுகிறது. முன்னதாக காஷ்மீரில் அதிபர் ஆட்சி திரும்பப் பெறப்படுகிறது.
பதவி ஏற்பு விழாவில் இரு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முப்தி முகமது சயீத் ஏற்கனவே கடந்த 2002–ஆம் ஆண்டு முதல் 2005–ஆம் ஆண்டு வரை காஷ்மீர் முதல்வராக பதவி வகித்தார்.
மத்தியில் வி.பி.சிங் சட்டசபையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் மெகபூபா பி.டி.பி. கட்சி தலைவராக இருக்கிறார்.