சிட்னி, பிப்ரவரி 28 – நேற்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19-ஆவது லீக் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் பதிவான முதல் 400 ரன்கள் இது தான்.
ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியில் இது 10-வது அதிகபட்சமாகும். தென்ஆப்பிரிக்கா 400 ரன்களை தாண்டுவது 4-வது முறையாகும். டிவில்லியர்ஸ் 162 ரன்களுடன் (66 பந்து, 17 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த மைதானத்தில் தனிநபர் அதிகபட்சம் இது தான்.
கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (3 ரன்) அப்போட்டின் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 33.1 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா இமாலய வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது 2-வது வெற்றியாகும். வெஸ்ட் இண்டீசுக்கு 2-வது தோல்வியாகும்.