கோலாலம்பூர், மார்ச் 2 – சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரித்த 2009 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு இன்று மாலை 6 மணியளவில், மஇகா தலைமையகத்தில் அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் மத்திய செயலவைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சங்கங்களின் பதிவிலாகா விடுத்த உத்தரவின் படி, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மத்திய செயலவையை இன்னும் கூட்டாத காரணத்தால், இன்று சுப்ரா தலைமையில் அக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, சங்கங்களின் பதிவிலாகா அனுப்பிய கடிதத்தில், 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் குழுவை அமைத்து, மறுதேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டத்தில், தேர்தல் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சங்கங்களின் பதிவிலாகா தனது உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று மஇகா பத்து தொகுதி தலைவர் ஏ.கே.ராமலிங்கம் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.