Home தொழில் நுட்பம் “சிங்கப்பூர் மண்ணில் ஒரு புதிய சகாப்தம்” – முரசு அஞ்சல் குறித்து சிங்கை கல்வி அமைச்சின்...

“சிங்கப்பூர் மண்ணில் ஒரு புதிய சகாப்தம்” – முரசு அஞ்சல் குறித்து சிங்கை கல்வி அமைச்சின் அல்லி அழகு!

1201
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 10 –(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து சிங்கப்பூர் கல்வி அமைச்சின் கல்வித் தொழில் நுட்பப் பிரிவு அதிகாரி திருவாட்டி அல்லி அழகு (படம்) சிங்கையில் முரசு அஞ்சல் மென்பொருள் பயன்பாடு குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள சிறப்புக் கட்டுரை இது) 

Alli Alagu Singapore photoமுன்னுரை

தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தனி முத்திரை பதித்த நாடுகளின் பட்டியலில்  சிங்கப்பூரும் ஒன்று என்று மொழிந்தால் அது மிகையாகாது. 1997-இல் சிங்கையின் கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பம் கால் எடுத்து வைத்தபோது மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அதுவும் கணினியில் கன்னித் தமிழ் இடம் பெற்றபோது சொல்லவா வேண்டும்? ஆயினும் இந்த மகிழ்ச்சி வெகுகாலத்திற்கு நீடிக்கவில்லை. 2008 வரை சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பலதரப்பட்ட தமிழ்மொழி உள்ளிடு மென்பொருள்கள் (Text Input Systems) பயன்படுத்தப்பட்டன.

இவற்றில் பல குறியீட்டு முறைகள், பலவகையான விசைப்பலகைகள், எழுத்துருக்கள் இணைக்கப்பட்டு ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்தன. அது மட்டுமல்லாமல் கணினி மற்றும் இணையம்வழி பகிர்வையும் சிரமத்துக்குள்ளாக்கி வந்தன.  இணையம்2.0 (Web2.0) பயன்களைத் தமிழில் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் எழுந்தன.

இதனால் தகவல் தொழில்நுட்பம் வழி கற்றல் கற்பித்தல் தமிழாசிரியர்களிடையே ஒரு சவாலாக இருந்தது. நம் தமிழ் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தின்  பயனை முழுமையாகப் பெற முடியாமல் போகக்கூடுமோ என்ற அச்சம் தோன்றியது.

இந்த எண்ணமே ஒரு தமிழ்மொழி உள்ளிடு மென்பொருள் அதுவும் யூனிகோட் குறியீட்டு[1] முறையில் தரப்படுத்தப்பட வேண்டும் என்ற உந்துதல் எங்களுக்குள் வித்திட்டது. இந்த எண்ணமே சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களையும் தமிழ் மாணவர்களையும் ஒரு புதிய சகாப்தத்துக்கு தயார்ப்படுத்தியது எனலாம். எங்கள் கல்வித்துறைக்கு இது ஒரு புதிய விடியல் என்று கூறினால் அது மிகையாகாது.

முரசு அஞ்சல்(கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) உள்ளிடு மென்பொருள்

2006-ஆம் ஆண்டில் கல்வித் தொழில்நுட்பப் பிரிவின் (Educational Technology Division, Ministry of Education) தலைமையில் ஒரு பணிக்குழு (Taskforce) அமைக்கப்பட்டது. அப்பணிக்குழுவில் கல்வியாளர்களும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும்  இடம்பெற்றிருந்தார்கள்.

Singapore Murasu Function 1 Alli Alaguஇம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் இது ஓர் இனிய கற்றல் அனுபவமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல்  மகிழ்ச்சிகரமான பயணமாகவும் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணிக்குழு உறுப்பினர்களின் அரிய பங்கு என்று கூறினால் அது மிகையாகாது.

எதற்காக யூனிகோட் குறியீட்டு முறை?  ஏன் ‘தமிழ் 99’ விசைப்பலகை? என்ற எண்ணங்கள் எங்களுக்குள் தோன்றின. தற்போது உலகளவில் யூனிகோட் குறியீட்டுத் தரத்தை யூனிகோட் ‘கொன்சோட்டியம்’ (Unicode Consortium) பரிந்துரைத்து அது நடப்பில் இருந்து வருகிறது. இத்தரத்தை மைக்ரோசாப்ட் (Microsoft), ஆப்பிள் (Apple) போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அவை யூனிகோட் குறியீட்டுத் தரத்தில் மென்பொருள்களையும் உருவாக்கி வருகின்றன.

‘தமிழ் 99’ விசைப்பலகை (Tamil’99 keyboard) 1999-ல் தமிழ்நாட்டில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தரப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2003-ல் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சும் ‘தமிழ் 99’ விசைப்பலகையினை (Tamil’99 keyboard)  ஏற்றுக்கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த விசைப்பலகையைப் பயன்படுத்துமாறு ஊக்குவித்தது.

இக்காரணங்களால் எங்களது தமிழ்மொழி உள்ளிடு மென்பொருள் யூனிகோட் குறியீட்டு முறையோடு எளிமையாக்கப்பட்ட ‘தமிழ் 99’ விசைப்பலகையுடன் பல சிறப்புக்கூறுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. அதற்கு முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) (Murasu Anjal( MOE-Singapore), என்ற பெயர் சூட்டப்பட்டது.

விரும்பத்தக்க விளைவுகள்

சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் இந்தப் புதிய மாற்றத்தை வரவேற்கின்றனர். அவர்கள் முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருளை ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக எங்கள் மென்பொருளிலுள்ள ‘ஆவணங்கள் மாற்றும் கருவியைப்’ (Converter) பயன்படுத்தி பழைய குறியீட்டு முறையில் தயாரித்த ஆவணங்கள் எல்லாவற்றையும் ஆசிரியர்கள் யூனிகோட் குறியீட்டுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.

Singapore Murasu Anjal Function Alli Alaguதமிழ் மாணவர்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கும் முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருளைத் வாங்கி உபயோகிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். வசதி குறைந்த மாணவர்களுக்குப் பள்ளிகள் நிதியுதவி வழங்கி ஆதரவு அளிக்கின்றன. இதுவரை 10,000 பிரதிகள் வீட்டுப் பயன்பாட்டுக்கு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

2012-இல் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் 93% தமிழாசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்)  மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி வழங்கி வருகிறார்கள். குறிப்பாகத் ‘தமிழ் 99’ விசைப்பலகையில் தட்டச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது எனக் கண்டறியப்பட்டது.

தரப்படுத்தப்பட்ட எங்கள் முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருள் தற்போது கணினிவழி மதிப்பீடு (E-Assessment) செய்வதற்கும் வழிவகுத்துள்ளது என்று மொழியும்போது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

2013-இல், பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவும் சிங்கப்பூர்த் தேர்வு ஆணையமும் இணைந்து முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்)) மென்பொருளின் ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருக்கின்றனர். இது 2017-இல் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்வுக்கு வழிவகுக்கும்.

முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருள் பொது சேவை உள்கட்டமைப்பு மறுஆய்வுக்குழு (Public Service Infrastructure Review Committee) கேட்டுக்கொண்டதற்கேற்ப தேசியக் கல்விக்கழகம் (National Institute of Education), சிங்கப்பூர்த் தேர்வு ஆணையம் (Singapore Examination and Assessment Branch), நாடாளுமன்றம் (Parliament), தகவல், தொடர்பு மற்றும் கலைகள் அமைச்சு (Ministry of Information, Communications and the Arts ) மற்றும் உயர் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

Murasu Anjal Spore 1 Screenshot

கால வரிசையில் நடைபெற்ற பணிகள்:

2006

  • கல்வித் தொழில்நுட்பப்பிரிவைச்(Educational Technology Division) சார்ந்த அதிகாரி, திருவாட்டி அல்லி அழகு, கல்வி அமைச்சு உள்ளிடு மென்பொருளின் தரப்படுத்தும் பணிக்குத் தலைவராகயிருந்து வழிநடத்தினார்.
  • பணிக்குழுவில் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (Curriculum Planning & Development Division), சிங்கப்பூர் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம் (Infocomm Development Authority of Singapore), தகவல் தொழில்நுட்பப்பிரிவு (Information Technology Branch), தேசியக் கல்விக்கழகம் (National Institute of Education),சிங்கப்பூர்த் தேர்வு மற்றும் மதிப்பீடுப் பிரிவு (Singapore Examination and Assessment Branch) ஆகிய பிரிவுகளிலிருந்து அதிகாரிகள் பிரதிநிதித்தனர்.

 2007

  • கல்வி அமைச்சின் தேவைக்கேற்ப ஒரு தரப்படுத்தப்பட்ட தமிழ்மொழி உள்ளிடு மென்பொருளை உருவாக்குவதற்கும் அந்த உருவாக்கத்தற்கான விலையைக் கணிக்கவும் ‘Request for Information” (RFI) என்னும் கோரிக்கையைப் பணிக்குழு வெளியிட்டது.
  • கல்வி அமைச்சின் உயர்தர இயக்குநர்கள் கூட்டத்தில்( Directors’ Meeting) தரப்படுத்தப்பட்ட தமிழ்மொழி உள்ளிடு மென்பொருளைச் சிங்கப்பூர்ப் பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சின் தலைமையகத்திலும் தேசியக்கல்விக்கழகத்திலும் மற்றும் சிங்கப்பூர்த் தேர்வு ஆணையத்திற்கும் வழங்க முழு ஆதரவும் சம்மதமும் தெரிவிக்கப்பட்டது.

2008

  • கல்வி அமைச்சின் நிதிப்பிரிவு ஒரு தமிழ்மொழி உள்ளிடு மென்பொருளை உருவாக்கவும் தரப்படுத்தவும் அங்கீகாரம் வழங்கியது.
  • பொது சேவை உள்கட்டமைப்பு மறுஆய்வுக்குழு (Public Service Infrastructure Review Committee) இந்த உருவாக்கத்தையும் தரப்படுத்தலையும் ஆமோதித்தது.
  • ஏலக்குத்தகை(Open Tender) அழைக்கப்பட்டது.

2009

  • முரசு அஞ்சல்(கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) என்னும் தமிழ்மொழி உள்ளிடு மென்பொருள் உருவாக்கப்பட்டு அமலாக்கம் கண்டது.
  • மென்பொருள் எல்லாப் பள்ளிக் கணினிக்கூடங்களிலும் கல்வி அமைச்சு தலைமையகத்திலும் தேசியக் கல்விக்கழகத்திலும் சிங்கப்பூர்த் தேர்வு ஆணையத்திலும் மற்றும் பிற அமைச்சுகளிலும் நிறுவப்பட்டன.
  • தமிழாசிரியர்களும் கல்வி அமைச்சு மற்றும் பிற அமைச்சுகளில் பணியாற்றும் அதிகாரிகளும் மென்பொருளின் பயன்பாடுயொட்டிய பட்டறைகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

2009- பிப்ரவரி 2013 வரை

  • கல்வித் தொழில்நுட்பப் பிரிவு முரசு அஞ்சல்(கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருளின் அமலாக்கத்தைக் கண்காணித்து அதன் பயன்பாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக நிறுவப்பட ஆதரவு அளித்து வந்தது.
  • முதன்மை ஆசிரியர்கள் தனிப்பட்ட ‘தமிழ் 99’ விசைப்பலகை தட்டச்சுப் பயிற்சிகளைத் தமிழாசிரியருக்கு வழங்கி வந்தனர்.

மார்ச் 2013-இலிருந்து இது வரை…

  • 2017-இல் நடைபெறவிருக்கும் தேசிய கணினிவழித் தேர்வுக்காகப் முரசு அஞ்சல் (கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருளின் ஆதரவுக்கான ஒப்பந்தத்தைப் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவும் சிங்கப்பூர்த் தேர்வு மற்றும் மதிப்பீடு பிரிவும் புதுப்பித்தன.
  • ஆங்கிலமும் தமிழ் எழுத்துகளும் பொறிக்கப்பட்ட இருபது தட்டச்சு விசைப்பலகைகளைப் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தமிழ் கற்பிக்கப்படும் எல்லாப் பள்ளிகளுக்கும் கொடுத்தது.

நிறைவுரை

கடந்த ஆறாண்டுக் காலமாகச் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் தரப்படுத்தப்பட்ட முரசு அஞ்சல்(கல்வி அமைச்சு-சிங்கப்பூர்) மென்பொருள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அறியும்போது எனக்குள் பேரின்பம் ஏற்படுகிறது. மாற்றம் ஒன்றே நிலையானது (Change is the only constant). ஆதலால் மாறிவரும் இந்தக் கணினி உலகில் இந்த மாற்றம் ஒரு தொடர்கதை.

-அல்லி அழகு 

[1]  Unicode provides a unique number for every character, no matter what the platform, no matter what the program, no matter what the language. http://www.unicode.org/standard/WhatIsUnicode.html. Unicode was the international encoding and font standards set by the Unicode Consortium, and supported by big industry players including Microsoft, Google and Adobe.