Home நாடு லகாட் டத்து முற்றுகை: 14 பேர் கொல்லப்பட்டனர் – போராட்டவாதிகள் சரணடைய ஹிஷாமுடின் கெடு!

லகாட் டத்து முற்றுகை: 14 பேர் கொல்லப்பட்டனர் – போராட்டவாதிகள் சரணடைய ஹிஷாமுடின் கெடு!

850
0
SHARE
Ad

Hishamuddin-Tun-Hussein-Onn

லகாட் டத்து, மார்ச் 3 – சபாவின் லகாட் டத்து பகுதியில் சுலு சுல்தான் படையினர் முற்றுகையிட்டிருக்கும் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு, அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த பகுதிக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் முற்றுகையிட்டிருக்கும் போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு உடனடியாக சரணடைய வேண்டுமென்று கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை முற்றுகையிட்டுள்ள போராளிகள் சந்திக்க வேண்டுமென்று அவர் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த பிரதமர் நஜிப், முற்றுகையிட்டிருந்தவர்கள் வெள்ளைக் கொடி காட்டினார்கள் என்றும் அதனை நம்பி சென்ற இரண்டு கமாண்டோக்கள் எனப்படும் மலேசிய போலீஸ் அதிரப்படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் முற்றுகையிட்டவர்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் பிரதமர் கூறினார். மேலும மூன்று போலீஸ் கமாண்டோக்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சண்டை நடைபெற்ற பகுதிக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினுக்கும், போலீஸ் துறையின் தலைவர் (ஐ.ஜி.பி) இஸ்மாயில் ஓமாருக்கும் அந்த பகுதி பொறுப்பில் இருந்த காவல் துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்த விவகாரம் முடிவுறும் வரை ஹிஷாமுடின் சபாவிலேயே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்சியிருக்கும் சூலு சுல்தானின் விசுவாசமிக்க படைவீரர்கள் இன்னும் அந்த பகுதியில் முகாமிட்டிருக்கின்றனர் என்று பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் முற்றுகையிட்டிருப்பவர்கள் மலேசியப் போலீஸ் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஓமார் கூறியுள்ளார்.

முற்றுகையிட்டிருப்பவர்கள் மலேசிய சட்டப்படி கடுமையான குற்றம் புரிந்திருக்கின்றார்கள் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் இஸ்மாயில் ஓமார் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்குயினோ ஆயுதம் தாங்கிய முற்றுகையாளர்கள் உடனடியாக சரணடைய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.