சென்னை, மார்ச் 2 – “எந்திரன்” படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் எப்போது என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி வந்திருக்கின்றது.
அவர் நடித்து வந்த “கோச்சடையான்” திரைப்பட படப்பிடிப்பு, படத்தின் தயாரிப்பு வேலைகளும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் நடந்து வருவதாகவும் இதனால் படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
சமீபத்தில் தொகுக்கப்பட்ட (எடிட்) முழுப் படத்தையும் பார்த்த ரஜினி படம் நன்றாக வந்திருப்பதாக முழு திருப்தி அடைந்ததோடு, ஆச்சரியத்தையும் வெளியிட்டாராம்.
ரஜினி எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் படம் வந்துள்ளதாக இந்தப் படத்தின் இயக்குனர் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய கே.எஸ். ரவிகுமாரும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் இயக்குனர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையிடமிருந்து கிடைத்த இந்த பாராட்டினால் சௌந்தர்யாவும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
படத்தின் பின்னணி ஒலி, இசை சேர்ப்பு, மற்றும் சிறப்பு காட்சிகள் ஆகியவை லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாங்காங்கில் ஒரே நேரத்தில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. மார்ச் 15ஆம் தேதி இந்த வேலைகள் நடைபெறும் என்று தெரிகிறது.
ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் படங்கள் போன்று “மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி” (Motion Capture Technology) இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் பொறுப்புக்களை கே.எஸ்.ரவிக்குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்கூட்டி ஒலி அமைப்பை கையாள்கிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் உலகம் முழுதும் கோச்சடையான் வெளியீடு காண்கின்றது.