புதுடெல்லி, மார்ச் 19 – மத்திய பிரதேச மாநில தொழில்நுட்ப தேர்வு வாரியத்தில் நடந்த பணி நியமன முறைகேடு தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர் என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பதவி விலகவேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. வியாபம் பணி நியமன முறைகேடு குறித்து மாநில விசேஷ அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது.
எனினும், மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருக்கும் வரை இந்த விசாரணை முறையாக நடக்காது. எனவே அவர் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் அடங்கிய குழு பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசியது.
அப்போது, அந்த குழுவினர் ‘வியாபம்’ முறைகேடு தொடர்பாக குறுந்தட்டு (சீ.டி) ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்தனர். பிரதமரை சந்தித்தபிறகு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-
“வியாபம் விவகாரம் தொடர்பாக நாங்கள் பிரதமரை சந்தித்தோம். இந்த ஊழல் இந்தியாவிலேயே மிகப்பெரியது. இந்த முறை வலுவான ஆதாரங்களை பிரதமரிடம் வழங்கி இருக்கிறோம்”.
“இந்த ஊழலில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக யார் ஊழல் செய்வதையும் அனுமதிக்க மாட்டோம் என்று மோடி கூறினார். எனவே தான் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்”.
“எங்கள் குழு பிரதமரிடம் பணி நியமன பட்டியலில் 48 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டு இருப்பது பற்றி தகுந்த ஆதாரங்களுடன் சி.டி. ஒன்றையும் கொடுத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிதின் மொகிந்தராவின் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட அசல் ஆவணங்களைத்தான் பிரதமரிடம் கொடுத்தோம்”.
“இந்த கணினி ஆவணங்களுக்குள், முன்பு முதல்வரியின் பெயர் இருந்தது. பின்னர் அவருடைய பெயர் அழிக்கப்பட்டுவிட்டது. எனவே மாநில முதல்-மந்திரியின் கீழ் இந்த விசாரணை நடைபெறக் கூடாது” என கபில்சிபல் கூறினார்.