உத்திரபிரதேசம், மார்ச் 20 – உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே விரைவு ரயில் தடம் புரண்டு 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் உத்திரபிரதேசம் மாநிலம் அரசு அறிவித்துள்ளது.