புதுடெல்லி, மார்ச் 23 – நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகள் மற்றும் கிராமத்தினரின் நலன் கருதி கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ என்ற பெயரில் நடத்தப்படும் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவ்வப்போது உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில் அவர் நேற்று 30 நிமிடங்கள் நிகழ்த்திய வானொலி உரையில் விவசாயிகள் பற்றி பேசியுள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ‘விவசாயிகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் கிராமத்தினரின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகள் நலன் கருதி தான் நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது’.
“நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அதை யாரும் நம்பிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டுக்கே உணவு வழங்கும் விவசாயிகள் ஏழையாக உள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை”.
“கிராமப்புறங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாதது முக்கிய பிரச்சனை ஆகும். உரங்களின் விலை அதிகரித்து வருவது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறோம்”.
“நிலம் கையகப்படுத்தும் மசோதா பிடிக்கவில்லை என்றால் மாநில அரசுகள் பழைய சட்டத்தையே பின்பற்றலாம். சில நேரங்களில் வசதியான அறையில் அமர்ந்து சட்டம் எழுதுபவர்களுக்கு கிராமங்களில் நடப்பது தெரியாமல் போய்விடுகிறது”.
“விவசாயிகளை ஏழைகளாகவே வைக்கத் தான் நில மசோதா பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா 120 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது” என்று மோடி வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.