Home நாடு “பிரதமருக்கான விமானம் – அரசாங்கம் 109 மில்லியன் கூடுதலாகச் செலுத்தியது!” ரபிசி ரம்லி

“பிரதமருக்கான விமானம் – அரசாங்கம் 109 மில்லியன் கூடுதலாகச் செலுத்தியது!” ரபிசி ரம்லி

517
0
SHARE
Ad

ACJ 320 Air Busகோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமரின் சொந்த உபயோகத்திற்காக அரசாங்கம் வாங்கியுள்ள சொகுசு விமானத்திற்கு சந்தை விலையை விட கூடுதலாக 109 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளது என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி அம்பலப்படுத்தியுள்ளார்.

ACJ 320 என்ற ரக இந்த விமானத்தை ஏர் லூதர் ஏஜி என்ற நிறுவனத்திலிருந்து முதலில் ஜெட் பிரிமியர் ஒன் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் பின்னர் ஜெட் பிரிமியர் நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் இந்த விமானத்தை 465 மில்லியன் ரிங்கிட் செலுத்தி வாங்கியுள்ளது என்றும் ரபிசி குறிப்பிட்டார்.

RAFIZIஇந்த விமானத்தின் தற்போதைய சந்தை விலையைவிட கூடுதலாக 109 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலுத்தியுள்ளது. மேலும் 29.44 மில்லியன் ரிங்கிட் (8 மில்லியன் அமெரிக்க வெள்ளி) செலவிட்டு இந்த விமானத்தின் உட்பகுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் ரபிசி (படம்) கூறினார். விமானத்தின் விலையில் புதுப்பிக்கப்பட்ட செலவினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் ரபிசி.

#TamilSchoolmychoice

இத்தகைய விமானம் இந்த காலகட்டத்தில் நமக்குத் தேவையா என்பது ஒருபுறமிருக்க, விமானத்தின் சந்தை விலையை விட இவ்வளவு பணம் கூடுதலாகக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்றும் ரபிசி கேள்வி எழுப்பினார்.

இந்த விமானம் வாங்கப்பட்ட விவகாரத்தை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹாரி அப்துலும் இந்த விமானம் வாங்கப்பட்டதை சாடியுள்ளார்.

மக்கள் விலையேற்றங்களால் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கும்போது, விலையுயர்ந்த சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார்கள், அதுவும் சந்தை விலையை விட கூடுதலாகக் கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றும் ஜொஹாரி கூறியுள்ளார்.