பாரிஸ், மார்ச் 26 – ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டியின் குரல் பதிவுகளை விசாரணை செய்ததில், சில திடுக்கிடும் தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த இராணுவ அதிகாரி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலில், “ஆரம்பத்தில் இரண்டு விமானிகளின் குரல் பதிவுகளை கேட்டதில் அவர்களுக்கு இடையில் மிகவும் இயல்பான உரையாடல்களே நிகழ்ந்துள்ளன. ஆனால், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானிகளில் ஒருவர் விமானிகள் அறையில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்ப அறைக்குள் வர இயலாமல் தவித்துள்ளார்”என்று அதிகாரி கூறியுள்ளார்.
“முதலில் அந்த விமானி கதவை லேசாகத் தட்டிப் பார்க்கிறார். இன்னொரு விமானியிடம் இருந்து பதில் இல்லை. பின்னர் கதவை வேகமாக தட்டுகிறார் அப்போதும் பதில் இல்லை. அதன் பின்னர் கதவை உடைக்க முயற்சி செய்கிறார்” என்ற திடுக்கிடும் தகவலையும் அந்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.
இதனால் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ளன.
என்றாலும், இது குறித்து முழு விபரங்களும் விசாரணை செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 24-ம் தேதி, பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில், 150 பேருடன் சென்ற ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானம் ஏ320 விபத்திற்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த அத்தனை பேரும் மரணமடைந்தனர். மீட்புப் பணிகள் தற்போது அதிவிரைவாக நடைபெற்று வருகின்றன.