Home நாடு பாஸ் கட்சியின் மாஃபுஸ் ஓமார் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

பாஸ் கட்சியின் மாஃபுஸ் ஓமார் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

639
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 26 – பாஸ் கட்சியின் பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபுஸ் ஓமார் (படம்) இன்று நாடாளுமன்ற அவையிலிருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவரின்  உத்தரவைப் பின்பற்றாதது மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை அவமதித்தது ஆகிய காரணங்களுக்காக அவர் நாடாளுமன்ற அவைக் கூட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

mahfuz-omarஹூடுட் எனப்படும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கம் மீதான உங்களின் நிலைப்பாடு என்ன என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாமில் கிர் பகாரோமை நோக்கி நாடாளுமன்ற விவாதத்தின் போது மாஃபுஸ் ஓமார் கேள்வி தொடுத்தார்.

கிளந்தான் மாநிலத்தில் இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்பட வேண்டுமென்று பாஸ் கட்சியின் தலைவரும் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்திருக்கும் தனிநபர் சட்டவரைவை தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் ஆதரிக்கப் போகின்றதா என்றும் ஜாமில் பகாரோமை நோக்கி மாஃபுஸ் கேட்டார்.

#TamilSchoolmychoice

அந்த சட்ட வரைவை தான் இன்னும் பார்க்காத காரணத்தால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என ஜாமில் பகாரோம் கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தின்போது, ஷாரியா நீதிமன்றங்களுக்கான சட்டம் மீதிலான திருத்தங்கள் ஆட்சியாளர்களின் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை என ஜாமில் கூற அதனால் ஆத்திரமடைந்த மாஃபுஸ் அமைச்சரை நோக்கி “நீங்கள் கோழை” என சத்தம் போட்டு கூறினார்.

அப்போது நாடாளுமன்ற அவையை நடத்திக் கொண்டிருந்த துணை அவைத் தலைவர் டத்தோ இஸ்மாயில் முகமட் சைட் மாஃபுசை நோக்கி உத்தரவுகள் பிறப்பித்தார். ஆனாலும் அதனை மதிக்காமல் குரலை உயர்த்தி சுமார் 30 நிமிடங்கள் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார் மாஃபுஸ்.

இதனால் வெறுப்படைந்த அவைத் தலைவர் இஸ்மாயில் மாஃபுசை நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்தார்.

“எனது உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றாதது, ஓர் அமைச்சரை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக மாஃபுஸ் ஓமாரை அவையிலிருந்து வெளியேற்றுகின்றேன்” என இஸ்மாயில் அறிவித்தார்.