வங்கதேசம், மார்ச் 28 – வங்கதேசத்தில் புனித நீராடுகையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவுக்கு அருகே, லங்கால்பந்த் என்னுமிடத்திலுள்ள பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில், “அஷ்டமி’ குளியலில் பலர் கலந்து கொண்டபோது இந்தச் சம்பவம் நேரிட்டது.
இதுகுறித்து வங்கதேச காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: “காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஆற்றுக்குள் இறங்க முயன்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்”.
“உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார் அவர்.
புனித நீராடுவதற்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையிலும், அந்தப் பகுதியில் போதிய அளவில் போலீசாரும், தன்னார்வப் பணியாளர்களும் நிறுத்தப்படாததே நெரிசலுக்குக் காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இந்துக்களின் புனிதத் தலமான லங்கால்பந்தில் புனித நீராடுவதற்காக, ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி வாரத்தில் வங்கதேசம், இந்தியா, நேபாளத்தைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு கூடுவது வழக்கம்.