புதுடெல்லி, மார்ச் 29 – டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தை, 5 பாகிஸ்தானியர்கள் கடத்த முயற்சித்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு இது தொடர்பாக அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் திடீர் என உடல் நிலை பாதிக்கப்பட்டது போல் நடித்தார். இதை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த 5 பேர் தாங்கள் மருத்துவர்கள் என்று கூறி அவருக்கு முதலுதவி செய்ய முன்வந்தனர்.”
“உடல் நிலை பாதிக்கப்பட்டவரை சோதனை செய்த அவர்கள், தாங்கள் உடனடியாக விமானியை சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் விமானிக்கு மருத்துவர்கள் குழுவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்.”
“மருத்துவர்கள் என்று கூறி உதவ முன்வந்த 5 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. இது விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இத்தகவலை இந்திய உளவுத்துறை முற்றிலும் மறுத்துள்ளது. எனினும், இது பற்றி ஏர் இந்தியா நிறுவனமோ, இந்திய விமான போக்குவரத்து ஆணையமோ வாய்திறக்க மறுக்கின்றன.
ஆனால், மிகச் சமீபத்தில் அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து துறை, எக்காரணத்தைக் கொண்டும் அந்நியர்களை விமானிகள் அறைக்குள் நுழைய விடக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தனியார் நிறுவன விமானி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.