டசல்டோர்ஃப், மார்ச் 29 – “வரலாற்றில் என் பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்” என்று விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி ஓர் ஆண்டுக்கு முன்பு தன்னிடம் கூறியதாக அவரின் முன்னாள் காதலி அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில், ஜெர்மன் விங்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி இடத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நினைவிடத்தில், மீட்புக் குழுவினரும், அந்தப் பகுதியின் கிராமத்தினரும் நேற்று (28 மார்ச் 2015) கூடியிருந்த காட்சி
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். துணை விமானி ஆண்டிரியஸ் லுபிட்ஸ்(28) விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலைப்பகுதியில் மோதச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துணை விமானி லுபிட்ஸின் முன்னாள் காதலி மரியா, புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். லூபிட்ஸ் தன்னிடம், “என் பெயரை வரலாற்றில் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாதபடி ஒரு செயலை செய்யப்போகிறேன். அந்த செயல் விமான துறையையே மாற்றி அமைக்கப்போகிறது” என்று அவர் கூறியதாக மரியா தெரிவித்துள்ளார்.
மேலும் லுபிட்ஸ், திடீரென்று தூக்கத்தில் எழுந்து நாம் கீழே விழுந்துகொண்டிருக்கிறோம் என்று சத்தம் போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மரியா கூறியது உண்மையெனில், வரலாற்றின் எதிர்மறையான பக்கங்களில் இடம் பிடிக்க வேண்டும் என எண்ணிய லூபிட்ஸின் பல நாள் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேறி உள்ளது.
லூபிட்சும் மாரியாவும் 5 மாதங்கள் ஒரே விமானத்தில் ஒன்றாக வேலை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.