கோலாலம்பூர், மார்ச் 30 – சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா இயோவின் பெற்றோர் வீட்டில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, வீட்டில் இருந்த 8000 ரிங்கிட் ரொக்கம், நகைகள், மதுபானங்கள் மற்றும் பறவைகளின் கூண்டு 5 பெட்டிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஹன்னா இயோ நேற்று தனது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலை சுமார் 10 மணியளவில்,முகமூடி அணிந்தபடி கையில் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்,என் தந்தையையும், சகோதரரையும் கயிற்றால் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் என் தாயார், பாட்டி, சகோதரரின் மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோரை ஒரு போர்வையால் தலையை மூடிக்கொள்ளும் படி மிரட்டியுள்ளனர். அதன்பின்னர் சுமார் 20 நிமிடங்கள் வீட்டை சூறையாடிய அவர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளர். நல்லவேளையாக இச்சம்பவத்தில் எனது குடும்பத்தில் எவரும் காயமடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள ஹன்னா குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக காவல்துறை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.