கொழும்பு, மார்ச் 31 – இலங்கையில் ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் ஒன்றிணையும் அபாயம் இருப்பதாக இலங்கையின் புதிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் பெரேரா கூறுகையில், “விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் வர்த்தகங்களை மேற்கொள்கிறது.”
“வர்த்தகம் பிராதானமாக்கப்பட்டது போல் தோன்றினாலும், அந்த இயக்கத்தினரை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கும் சூழல் நிலவிய நிலையில், இலங்கை அரசு கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக, கடந்த வாரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.