ஐரோப்பா, ஏப்ரல் 2 – கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணிகள் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே, குறிப்பிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்ப சில மணி நேரங்கள் கால விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று ’குருய்சர் எனேபிள்ட்’ விமான போக்குவரத்து அமைப்பை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அது குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
பயணிகள் விமானமானது வானில் பறந்து கொண்டிருக்கும் போது எரிபொருள் தேவைக்கான அழைப்பை விடுக்கும். உடனே எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம், பயணிகள் விமானத்துக்குக் கீழே பறக்கும்.
அதில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குழாய் (பம்ப்) மூலம் பயணிகள் விமானத்துக்கு எரிபொருள் செல்லும். எரிபொருள் நிரம்பியதும் குழாயை அடைத்துவிட்டு எரிபொருள் வழங்கும் விமானம் தரையிறங்கிவிடும்.
இந்த முறை ஏற்கனவே ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை பயணிகள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டதில்லை. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஜூரிச்சில் இருந்து சிட்னிக்கு எங்கும் தரையிறங்காமல் விமானம் செல்லும் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.