கடந்த 3 நாட்களுக்குள் இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு எதிராகப் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், போராடி வருகின்றனர்.
இதனையடுத்து அங்கிருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் கப்பல்களையும், விமானங்களையும் ஏமனுக்கு அனுப்பியது.
அங்கிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம், கொச்சின், மும்பைக்கு இந்தியர்கள் பத்திரமாக நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், 2-வது கட்டமாக அங்கிருக்கும் 300-க்கும் அதிகமான இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா சென்று அவர்களை பத்திரமாக மீட்டுள்ளது.
இதனிடையே ஜிபூட்டி தீவில் தங்கி, மீட்புபணிகளை மேற்பார்வையிட்டு வரும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி யூசப்பை சந்தித்துப் பேசினார்.
இந்தியா மீட்புப்பணிகளை ஜிபூட்டி தீவிலிருந்து மேற்கொள்ள அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்தார் வி.கே.சிங். வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் 4-வது மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையாகும்.
இந்திய விமானப்படை விமானம் ஒன்று இவர்களை மீட்டு மும்பை கொண்டு வந்தது. 190 இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் ஐ.ஏ.எப்-சி-17 விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு மும்பை வந்து சேர்ந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏமன் அதிபர் அபிடிராபோ மன்சூர் ஹாதி மாளிகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர். 15-க்கும் மேற்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்கொய்தா தீவிரவாதிகள் ஏடனில் உள்ள சிறைச்சாலையை உடைத்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான கைதிகளை விடுவித்தனர் என்றும் பாதுகாப்புபடையினர் தெரிவித்தனர்.