யாழ்ப்பாணம், ஏப்ரல் 3 – ‘இலங்கைக் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது’ என, அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம், இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டிருப்பதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அண்மையில், இலங்கை – இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையே, சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, ஆண்டொன்றுக்கு, 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு, இந்திய மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என, தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர்.
என்றாலும், ‘தடை செய்யப்படாத வலைகள் மூலம், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால், அதை இலங்கை மீனவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்’ என, இலங்கை மீனவர்கள் சங்கத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வடமாகாண மாவட்டங்களின் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், கடற்தொழில் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.