கோலாலம்பூர், ஏப்ரல் 4 – நாளை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ள உகாதி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்கின்றார்.
பல்வேறு இயக்கங்களின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக உழைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அட்சய குமார் ராவ் கூறியுள்ளார்.
“முதல் முறையாக உகாதி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் கலந்து கொள்கின்றார். அதனால் நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். இந்த வருடம் மிகப் பெரிய அளவிலான கொண்டாட்டமும், உற்சாகமும் இருக்கும்” என்று அட்சய குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
மதியம் 2.30 மணியளவில் தொடங்கி இரவு 11 மணிவரை நடைபெறும் திறந்த இல்ல உபசரிப்பில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் பாரம்பரிய தெலுங்கு வகைகளைச் சேர்ந்த உணவுகள் வழங்கப்படவிருக்கின்றன. அதேவேளையில், இதற்கென்றே சிறப்பான கோலங்களும் வரையப்பட இருக்கின்றன.
பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் முற்றிலும் நுழைவு இலவசமான இந்த விழாவில், சுமார் 15,000 மலேசியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.