திருவனந்தபுரம், ஏப்ரல் 4 – உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில், சிக்கித் தவிக்கும் மேலும் 1,900 இந்தியர்கள் இன்றைக்குள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்; “ஏமன் உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 விமானங்களும், 2 கப்பல்களும் அனுப்பப்பட்டு உள்ளது. விமானங்கள் ஏமனை அடைந்து விட்டன”.
“அவற்றில் 1 கொச்சிக்கும், மற்ற 2 மும்பைக்கும் இன்றிரவு திரும்பி விடும். இரண்டு கப்பல்கள் ஏமனின் அடேன், ஹோடிடா துறைமுகங்களை அடைந்து விட்டது. அவை நாளைக்குள் (இன்றைக்குள்) இந்தியா திரும்பி விடும்.”
“இந்த நடவடிக்கையால் 1,900 இந்தியர்கள் நாடு திரும்புவார்கள்” என உம்மன் சாண்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து சுமார் 2500 இந்தியர்கள், ஏமன் தலைநகர் சனாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 35 இந்தியர்கள், ஏமனில் இருந்து சவூதி அரேபியாவுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.