Home நாடு 6 வயது குழுந்தை பேரங்காடியில் விழுந்து மரணம் – பாதுகாப்புகள் தீவிரமாக்க கோரிக்கை!

6 வயது குழுந்தை பேரங்காடியில் விழுந்து மரணம் – பாதுகாப்புகள் தீவிரமாக்க கோரிக்கை!

603
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – கடந்த ஞாயிற்றுக்கிழமை தாயார் செல்பேசியில் கணவருடன் விவாதம் செய்து கொண்டிருக்க, 6 வயது குழந்தை 5வது மாடியிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேரங்காடிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கணவன் மனைவிக்கிடையே செல்பேசி வழி நடந்த வாக்குவாதம் 5 வயது குழந்தையின் உயிரைப் பறிக்க காரணமாக அமைந்த இந்த சோகச் சம்பவம் கோலாலம்பூரில் நிகழ்ந்தது.

Kenanga Mall

#TamilSchoolmychoice

சம்பவம் நடந்த கெனாங்கா பேரங்காடி

தாமான் கன்னாட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் மூசா, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் வீடு திரும்பியபோது அங்கு தனது மனைவியும் இரு மகள்களும் இல்லை என்பதை அறிந்தார். உடனடியாக தனது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.

“என் மனைவியை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் தனது தோழியுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புடுவில் உள்ள கெனங்கா வணிக வளாகத்திற்கு சென்றிருப்பதாக கூறினார். ஏன் என்னிடம் முன்கூட்டியே விவரம் தெரிவிக்கவில்லை என்று கேட்டதுடன், எங்கே வந்து அவர்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் பேருந்தில் வீடு திரும்புவதாக அவர் கூறினார்,” என்கிறார் மூசா.

இவ்வாறு அவர் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், இத்தம்பதியரின் மூத்த மகளான 6 வயது நூர்ஹயாடா சோஃபியா, அவர்கள் இருந்த வணிக வளாகத்தின் தானியங்கி படிக்கட்டு (escalator) அருகே சென்றிருக்கிறாள்.

அந்த படிக்கட்டுகளின் மீது அவள் ஏறியபோது, அதிலிருந்து வழுக்கி, மறுபக்கமாக விழுந்தாள். 5 தளங்கள் கடந்து கீழே விழுந்ததில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

“மகள் கீழே விழுந்தது கூட தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென பெரும் கூச்சல் கேட்டதுடன் செல்பேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் என் மனைவி மீண்டும் தொடர்பு கொண்டு என் மகள் இறந்துவிட்டதாக கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை,” என்று துயரம் தோய்ந்த குரலில் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார் மூசா.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக நூர்ஹயாடா சோஃபியா இறந்திருக்கிறாள். மூசாவின் சொந்த ஊரான மூவாரில் சோஃபியா அடக்கம் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

கோலாலம்பூர் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு வெளியே கண்களில் வழிந்தோடிய கண்ணீருடன் அரற்றிக் கொண்டிருந்த சோஃபியாவின் தாய், “நான் தவறு செய்துவிட்டேன். அதனால் என் மகள் இறந்துவிட்டாள்,” என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது பார்ப்பவர்கள் மனதை உருக்குவதாக இருந்தது.

இந்த சம்பவத்தின் காணொளி நட்பு ஊடகங்களில் பரவ அதனால் பலத்த சர்ச்சையும் உருவாகியுள்ளது. கவனக்குறைவு அம்சத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் வேளையில், குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை வெளியே அழைத்துச் செல்லும் போது போதிய கவனத்தை அவர்கள் மீது செலுத்துவதில்லை என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், குழந்தைகளுக்கென போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற அறைகூவலும் தகவல் ஊடகங்களில் எழுந்துள்ளது.