செமினி, ஏப்ரல் 7 – செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் 5 பேரின் அடையாளங்கள் காணப்பட்டுள்ள நிலையில், 6 வது நபரான அய்டானா பைசியராவின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
இது குறித்து கோலாலம்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த பிரதிநிதி கூறுகையில், அந்த சடலம் அய்டானா பைசியராவினுடையது தானா என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“இன்னும் அவரின் பாலினம் கூட உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று அவரின் உறவினர் என்று கூறி சிலரை கிர்கிஸ்தான் தூதரகம் அழைத்து வந்தது” என்று மருத்துவமனைப் பிரதிநிதி கூறியுள்ளார்.
அய்டானா பைசியராவின் சகோதரி என நம்பப்படும் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவர் அய்டானாவின் அடையாளத்தைக் கண்டறிய காவல்துறைக்கு உதவி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பெண்ணுடன் கிர்கிஸ்தான் தூதரக அதிகாரியும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அதிகாரி, அய்டானா கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், அவர் மலேசியாவில் அண்மைக் காலமாக பணியாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
“குறைந்தபட்சம் கடந்த ஓராண்டு காலமாக மலேசியாவில் அய்டானா பணியாற்றி வந்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன,” என்று கூறிய அந்த தூதரக அதிகாரி, மேற்கொண்டு எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் துணை விமானியாக அய்டானா பணியாற்றியதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு அவர் செம்பாகா ஏவியேஷன் நிறுவனத்தின் ஊழியர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே அய்டானாவின் அடையாளத்தை உறுதி செய்ய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிலாங்கூர் காவல்துறை மூத்த தலைமை துணை ஆணையர் டத்தோ அப்துல் சமா தெரிவித்துள்ளார்.
“விபத்தில் பலியானவர் குறித்த வலுவான தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் மரபணு பரிசோதனை மூலமாகவே அவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும். அவரது குடும்ப உறுப்பினர் யாரேனும் இச்சோதனைக்கு முன்வந்தால், மரபணு மாதிரிகளை ஒப்பிட வசதியாக இருக்கும்.
“இன்று கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வந்த பெண்மணி, விபத்தில் பலியானவரின் ஒன்றுவிட்ட சகோதரி என தெரிவித்தார். எனினும் அவரைவிட மேலும் நெருக்கமான குடும்ப உறுப்பினரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அப்துல் சமா.