கோலாலம்பூர், ஏப்ரல் 13 – மாயமான எம்எச்370 விமானத்தைப் பற்றி மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 16-ம்தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் தேடுதல் பணிகள் குறித்த இந்த பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலியா சார்பில் அந்நாட்டின் துணைப் பிரதமர் வாரென் ட்ரஸ் மற்றும் சீனா சார்பில் அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் யங் சுவான்டாங் ஆகிய இருவரும் பங்கேற்பார்கள் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று அறிவித்துள்ளார்.
“இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இதுவரை தேடுதல் பணியில் மூன்று நாடுகளின் பங்களிப்பு மற்றும் வியூக பணிக்குழுவின் (strategy working group) ஆலோசனைப் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்” என்று லியாவ் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.