Home நாடு இன்று மஇகா – சங்கப் பதிவகம் வழக்கு! இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

இன்று மஇகா – சங்கப் பதிவகம் வழக்கு! இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

462
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – சங்கப் பதிவகத்திற்கும், மஇகா தரப்பிற்கும் இடையிலான வழக்கு இன்று தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கும் வழக்கில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3ஆம் தரப்பாக 2009 மத்திய செயலவை அனுமதிக்கப்படுமா?

MIC-logoசங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மத்திய செயலவை நாங்கள்தான் என்பதால், எங்களையும் மூன்றாவது தரப்பாக, (Intervener) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என 2009 மத்திய செயலவை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு முதலில் இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகின்றது.

#TamilSchoolmychoice

இந்த மனுவை 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய செயலவையின் சார்பில் மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணனும், 2013 கட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்களின் சார்பில் கெடா ஆனந்தனும் சமர்ப்பித்துள்ளனர்.

மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கில், சங்கப் பதிவகத்தின் முடிவுகளைச் செயல்படுத்தாமல் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பழனிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

Palanivel MIC Presidentஇந்த இடைக்காலத் தடையுத்தரவு விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு முன்பாக தங்களையும் மூன்றாவது தரப்பாக அனுமதிக்கக் கோரும் மனுவை முதலில் விசாரிக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதலில் இந்த விசாரணை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கை அணுக்கமாக கண்காணித்து வரும் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, 2009 மத்திய செயலவை, மூன்றாம் தரப்பாக நீதிமன்ற வழக்கில் அனுமதிக்கப்படுவதை நீதிபதி ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும், 2013இல் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவருமான செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனை மூன்றாம் தரப்பாக வழக்கில் அனுமதித்திருப்பதால் டத்தோ சரவணன், ஆனந்தன் மனுக்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களையும் மூன்றாம் தரப்பாக அனுமதிப்பதில் நீதிமன்றத்திற்கு ஆட்சேபம் இருக்காது என்றே கருதப்படுகின்றது.

இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

Saravananஅதே வேளையில், இன்று வரை வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை, வழக்கு முடிவடையும் வரை நீதிமன்றம் நீட்டிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சங்கப் பதிவகம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, அந்த உத்தரவுகளை செயல்படுத்தினால், வழக்கின் போக்கும், திசையும் மாறிவிடும் என்பதால், அந்த உத்தரவுகளை நீதிமன்ற வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற இடைக்காலத் தடையுத்தரவு என்பது நீதிமன்றங்களைப் பொறுத்தவரை வழக்கமான ஒன்றுதான்.

இது இடைக்காலத் தடையுத்தரவுதான் என்பதோடு, வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரைதான் இந்த இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கும்.

எனவே, மஇகா 2009ஆம் ஆண்டு மத்திய செயலவை மூன்றாவது தரப்பாக வழக்கில் அனுமதிக்கப்படுகின்றது – அதே வேளையில் வழக்கு முடிவடையும்வரை சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை எந்தத் தரப்பும் செயல்படுத்தக் கூடாது என்ற இடைக்காலத் தடையுத்தரவு – என இரண்டு முடிவுகளை இன்றைய வழக்கில் எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்